சென்னை: மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள்
சென்னை சாலைகளில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த டபுள் டக்கர் பஸ்களை மீண்டும் கொண்டுவர சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 500 பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
நகரின் போக்குவரத்து சேவைகள்
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ரயில், மெட்ரோ போன்றவை இருந்தாலும், பஸ்களே அனைத்து இடங்களுக்கும் செல்வதால் அவற்றில் கூட்டம் எப்போதும் நிறைந்தே இருக்கும்.
தாழ்தள பேருந்துகள்
சென்னை எம்டிசி, ஆயிரக்கணக்கான பேருந்துகளை சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ஏசி பஸ், டீலக்ஸ் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. விரைவில் தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன, இவை டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
18 ஏ வழித்தடத்தில் டபுள் டக்கர்
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 1970களில் முதன் முறையாக சென்னையில் இவை அறிமுகமாகின. 1980களில் போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டது. 1997ஆம் ஆண்டில் மீண்டும் இயக்கப்பட்ட இவை, 2008ஆம் ஆண்டு வரை 18 ஏ வழித்தடத்தில் சேவையளித்தன. பின்னர் பல்வேறு கட்டுமானப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டன.
மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை
மீண்டும் சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இவை மின்சாரத்தில் இயங்கும் வகையில் இயக்கப்பட உள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்த எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் வாங்கப்பட உள்ளது.
தனியாரிடம் ஒப்படைப்பு
இந்த பேருந்துகளை இயக்கவும் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். எம்டிசி, வழித்தடம், கட்டணம் போன்றவற்றை நிர்ணயிக்கும். டிக்கெட் வசூலையும் எம்டிசியே நிர்வகிக்கும்.
960 கோடி ரூபாய் ஒப்பந்தம்
டபுள் டக்கர் பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டத்தையும் அசோக் லைலாண்ட் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துள்ளது. 500 டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் வெளியிடப்பட உள்ளது.
பயணிகளின் மகிழ்ச்சி
மும்பையில் கடந்த ஜனவரியில் நாட்டின் முதல் ஏசி இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. பெங்களூரிலும் விரைவில் அறிமுகமாக உள்ளன. சென்னையிலும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் தகவல் பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.